×

அதிக கட்டணம் வசூல் எதிரொலி ஆம்னி பஸ்களுக்கு கட்டணம் நிர்ணயிக்க தனி ஆணையம்: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆம்னி பஸ் நிர்வாகங்கள், அவற்றின் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. அக்டோபர் 2ம் நாளான இன்று (நேற்று) இரவு நெல்லையில் இருந்து சென்னைக்கு திரும்ப அதிக அளவாக ரூ.4,460 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நெல்லையை விட குறைந்த தொலைவு கொண்ட மதுரையில் இருந்து சென்னைக்கு, அதை விட அதிகமாக ரூ.4,499 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கோவையில் இருந்து சென்னைக்கு ரூ.4,970, திருச்சியிலிருந்து சென்னைக்கு ரூ.4,410 கட்டணம் பெறப்படுகிறது. விடுமுறை நாட்கள் நெருங்க நெருங்க இந்தக் கட்டணம் இன்னும் அதிகரிக்கக் கூடும். இதே காலத்தில் சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் செல்ல ரூ.3,419 மட்டும் தான் கட்டணம். விமானத்தை விட ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆம்னி பஸ்களின் கட்டணக் கொள்ளையை அரசு இனியும் அனுமதிக்கக் கூடாது. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும், இது தொடர்பான சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளைக் கருத்தில் கொண்டும் தமிழ்நாட்டில் ஆம்னி பஸ்களின் கட்டணத்தை நிர்ணயிக்க தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஆணையத்தை ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் தமிழக அரசு அமைக்க வேண்டும். ஆணையம் நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்களின் உரிமத்தை ரத்து செய்யவும், லட்சக்கணக்கில் தண்டம் விதிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post அதிக கட்டணம் வசூல் எதிரொலி ஆம்னி பஸ்களுக்கு கட்டணம் நிர்ணயிக்க தனி ஆணையம்: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Special ,Anbumani ,CHENNAI ,BAMA ,President ,Omni ,Dinakaran ,
× RELATED காவிரி பாசன மாவட்டங்களில் மும்முனை...